Sunday, August 18, 2019

இலங்கை அரசாங்கம் அவசரகால அதிகாரங்களை புதிய வடிவில் புதுப்பிக்கின்றது

SHARE
இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, நீண்டகாலமாக அமுலிலிருந்த அவசரகால விதிகள் கடந்த மாதம் காலவதியாகியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படைகளுக்கு அதே ஒடுக்கு முறை அதிகாரங்களை வழங்குகுவதற்காக, புதிய விதிகளை  அமுல்படுத்தியுள்ளதோடு பழைய பொலிஸ்-அரச சட்டங்களை புதுப்பித்துள்ளார்.



முதலாவதாக, விசாரணையின்றி நீண்ட நாட்கள் தடுத்து வைக்க அனுமதிக்கும் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் புதிய விதிகளை சேர்ப்பதாக ஜனாதிபதி ஆகஸ்ட் 29 திகதியிடப்பட்ட நான்கு அறிவித்தல்களை விடுத்தார். 2009ல் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதும், மற்றும் புனர்வாழ்வு முகாங்கள் என சொல்லப்படுபவற்றில் “புலி சந்தேக நபர்களாக” உள்ள தமிழ் இளைஞர்களை தடுத்துவைப்பதை நீடிப்பதும் இந்த பிரகடனங்களில் அடங்கும்.



 “புணர்வாழ்வுக்காக” கிட்டத்தட்ட 6000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். எவர் மீதும் எந்தக் குற்றமும் சுமத்தப்படவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், பலவந்தமாக பெற்றுக்கொள்ளும் ஒப்புதல் வாக்குமூலத்தை “சந்தேக நபர்களுக்கு” எதிராக நீதி மன்றத்தில் உபயோகிக்க முடியும். அத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கே உண்மையை நிரூபிக்கும் பொறுப்பு உண்டு –வேறு வார்த்தைகளில் சொன்னால், தாம் அப்பாவி என்பதை அவர்கள் நிரூபிக்கத் தவறினால், அவர்கள் மீது குற்றத் தீர்ப்பளிக்கப்படும்.  



அரசாங்கம் அரசியலமைப்பையும் சட்ட முறைமையையும் அலட்சியம் செய்வதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், ஜனாதிபதியின் அறிவித்தல்கள் வெறுமனே விடுக்கப்பட்டதோடு கடந்த வாரம் வரை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முறையாக வர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்டிருக்கவில்லை. 



இரண்டாவதாக, இராஜபக்ஷ செப்டெம்பர் 3 அன்று இன்னுமொரு பொது அறிவித்தலை விடுத்தார். அரசுக்கு சொந்தமான பிரதான சக்தி விநியோகிஸ்தரான இலங்கை மின்சார சபையை கட்டாய சேவையாக பிரகடனப்படுத்தி, அதன் மூலம்  மின்சார சபை ஊழியர்களின் சகல தொழிற்சங்க நடவடிக்கைகளையும் சட்ட விரோதமாக்கினார். அருந்தையாக பயன்படுத்தப்பட்டிருந்த 1979ம் ஆண்டு அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் கட்டளை ஒன்றை பிறப்பித்த ஜனாதிபதி, மின்சாரசபை தொழிற்சங்கம் செப்டெம்பர் 7 அன்று திட்டமிட்டிருந்த ஒருநாள் வேலை நிறுத்தத்தையும் தடை செய்தார்.



கடந்த காலத்தில் அரசாங்கங்கள் அவசரகால சட்ட விதிகளை இதே நோக்கத்திற்காக பிரயோகித்துள்ளன. 1979 சட்டத்தைப் பயன்படுத்துவதில் உள்ள ஒரே வரையறை, அது பொதுத் துறை ஊழியர்களை மட்டுமே உள்ளடக்கியிருப்பதாகும்.



புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின் கீழ், நிறுவனம் வழங்கிய வேலைக்கு “முட்டுக்கட்டை” இடும் வகையில் வேலை நிறுத்தம் செய்யும் எவரும், ஏனைய தொழிலாளர்களை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுக்கும் அல்லது “அத்தகைய ஒரு நடவடிக்கையை எழுத்து மூலம் மற்றும் பேச்சின் மூலம் தூண்டிவிடும்” எவரும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்.



இரண்டு அல்லது ஐந்து ஆண்டு கடும் சிறைத்தண்டனை மற்றும்/அல்லது ரூபா 5,000 வரை தண்டமும் தண்டனையில் அடங்கும். குற்றவாளியாக்கப்படும் நபரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் முடியும். தொழிற்சங்கத்தின் தீர்மானத்தை பின்பற்றியே ஊழியர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற கூற்றின் அடிப்படையிலான எந்தவொரு பாதுகாப்பையும் இந்தச் சட்டம் திட்டவட்டமாக நிராகரிக்கின்றது.  



மூன்றாவதாக, சந்தேக நபர்களை தடுத்து வைத்திருக்கும் காலத்தை 24 முதல் 48 மணித்தியாலம் வரை நீடிக்க பொலிசுக்கு அதிகாரத்தை பலப்படுத்துவதற்காக நாட்டின் குற்றவியல் பிரிவில் திருத்தம் செய்ய அரசாங்கம் செப்டெம்பர் 5 அன்று முயற்சித்தது. இந்த திருத்தம் ஆரம்பத்தில் 2007ல் ஒரு தற்காலிக நடவடிக்கையாக நிறைவேற்றப்பட்டு 2009ல் கிடப்பில் வைக்கப்பட்டது. எதிர்க் கட்சி இந்த புதிய திருத்தத்தின் சட்டப்பூர்வத் தன்மையை எதிர்த்ததை அடுத்து, ஆளும் கூட்டணி பின்வாங்கிய போதும், இந்த நடவடிக்கையை அமுல்படுத்துவதற்கான விதிகளை துரிதமாக அமுல்படுத்த சபதம் பூண்டது.



நான்காவதாக, இராஜபக்ஷ "பொது ஒழுங்கை பேணுவதற்காக" நாட்டின் 22 மாவட்டங்களிலும் முப்படைகளையும் அழைப்பதற்கு பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு கட்டளையை பிறப்பித்துள்ளதாக செப்டம்பர் 7 அன்று பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.



இந்த கட்டளை, குறிப்பாக தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் போல், விளைபயனுள்ள ஒரு இராணுவ ஆக்கிரமிப்பை பேணுகின்றது. இந்த பொதுப் பாதுகாப்புச் சட்டம், யுத்த கால பாதுகாப்பு சோதனை நிலையங்களையும் ரோந்து நடவடிக்கைகளையும் தொடர்வதற்கும், பொது மக்களின் அமைதியின்மையை நசுக்குவதற்கு இராணுவத்தை பயன்படுத்தவும் அரசாங்கத்துக்கு அதிகாரமளிக்கின்றது. இந்த சட்டத்தின் கீழ் கடமைக்கு அழைக்கப்படும் இராணுவ உத்தியோகத்தர்களுக்கு தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பரந்த அதிகாரம் உண்டு.



இராஜபக்ஷ ஒரு இராஜதந்திர செப்படி வித்தையில் ஈடுபட்டுள்ளார். அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது, அதற்கு ஜனநாயகத்தின் மீது திடீரென தோன்றிய அக்கறையினால் அல்ல. மாறாக, ஜெனீவாவில் திங்கட் கிழமை தொடங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 18வது அமர்வுக்கு முன்னதாக, தனது யுத்தக் குற்றம் மற்றும் ஜனநாயக உரிமை மீறல்கள் பற்றிய சர்வதேச விமர்சனங்களை மழுங்கலாக்குவதற்காகவே அதைச் செய்தது.



அரசாங்கம், புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தின் கடைசி மாதங்களில் இலங்கை இராணுவத்தல் செய்யப்பட்ட யுத்தக் குற்றங்கள் பற்றிய "நம்பகமான ஆதாரங்களை" கண்டுபிடித்த, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு முன்வைத்துள்ள அறிக்கையை கலந்துரையாடுவதை தவிர்ப்பதற்காக ஏங்கிக்கொண்டிருந்தது.



இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்துக்கு ஆதரவளித்ததோடு பல ஆண்டுகளாக அதன் யுத்தக் குற்றங்களை கண்டும் காணாதது போல் இருந்த, அமெரிக்க, இந்திய மற்றும் ஐரோப்பிய சக்திகள், இலங்கையை சீனாவிடம் இருந்து விலகிக்கொள்ளுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் பேரில் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமான விவகாரத்தை பற்றிக்கொண்டன.



அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும், அவசரகாலச் சட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறும் துஷ்பிரயோக குற்றங்கள் சம்பந்தமாக நம்பகமான விசாரணைகளை நடத்துமாறும் இராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தின. அரசாங்கம் நியமித்துள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது போலியானதாகும். அது யுத்தத்தின் போது அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் நடவடிக்கைகளை பூசி மெழுகுவதற்காக அது நியமித்துள்ளவர்களுடன் மூழ்கிப் போயுள்ளது.



அவசரகாலச் சட்டத்தை ஓரங்கட்டியுள்ள இராஜபக்ஷவுக்கு, கால் நூற்றாண்டு கால யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பரந்த பொலிஸ்-அரச இயந்திரத்தை கலைத்துவிடும் எண்ணம் கிடையாது. சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும் போது, அது சமூகப் பிளவை ஆழப்படுத்துவதோடு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற, கிராமபபுற வறியவர்கள் மத்தியில் அதிருப்தியை குவிக்கும் என்பதையிட்டு அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருக்கின்றது.



குறிப்பாக, மின்சார சபை ஊழியர்கள் மீதான அத்தியாவசிய சேவை கட்டளையை அமுல்படுத்துவது, முழு தொழிலாள வர்க்கத்துக்கும் ஒரு எச்சரிக்கையாகும். யுத்த காலத்தில் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்தத் தயக்கம் காட்டாத அரசாங்கம், அத்தியாவசிய சேவைகளை பேணுதல் என்ற பெயரில் பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் மீண்டும் அதைச் செய்யும்.



பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இராணுவத்தை நிலைகொள்ளச் செய்வது பற்றிய பாராளுமன்ற விவாதத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கையை நியாயப்படுத்திய அமைச்சரவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, "பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த எதிர்காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்களின் சாத்தியங்களை தவிர்ப்பதற்கு எமக்கு அவை [அத்தகைய சட்டங்கள்] தேவை," என்றார். மேலதிக நியாயப்படுத்தலாக, அமெரிக்க தேசப்பற்று சட்டத்தை மேற்கோள் காட்டிய அவர், "அதன் கீழ் யாரும் கைதுசெய்யப்பட்டால், அவருக்கு அல்லது அவளுக்கு என்ன நடக்கும் என்பது எமக்குத் தெரியாது" என சுட்டிக்காட்டினார்.



மின்சார சபை ஊழியர்களுக்கு எதிரான அத்தியாவசிய சேவை கட்டளை அமுல்படுத்தப்பட்டதை எந்தவொரு தொழிற்சங்கமும் எதிர்க்கவில்லை. மின்சார சபை தொழிற்சங்கங்கள் மத்தியில் முன்னணியில் உள்ள, எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பீ.) கட்டுப்பாட்டிலான இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சங்கமும் இதில் அடங்கும். இந்த தொழிற்சங்க கூட்டமைப்பு, கடந்த ஜனவரியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பள மிச்சத்தை கொடுப்பதாக அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளதாக தெரிவித்து, செப்டெம்பர் 7 அன்று வேலை நிறுத்தத்தை சாதாரணமாக முடிவுக்குக் கொண்டுவந்தது.



புதிதாக விதிகளும் கட்டளைகளும் வரும்போது அவற்றை அடக்கமாக ஏற்றுக்கொள்வதே ஜே.வி.பீ. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) போன்ற எதிர்க் கட்சிகளின் பிரதிபலிப்பாக உள்ளது. அவர்கள் எப்போதாவது ஜனநாயக உரிமைகளை காப்பவர்களாக காட்டிக்கொள்வது முற்றிலும் வஞ்சகமானதாகும். அவர்கள் இனவாத யுத்தத்தை முழுமையாக ஆதரித்ததோடு புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், அவசரகாலச் சட்டம் மாதாமாதம் நீடிக்கப்படுவதற்கு வாக்களித்தனர். இரு கட்சிகளும் இப்போது தாம் எதிர்க்கும் பொலிஸ் அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்கு ஆதரவாக 2007ல் வாக்களித்தன. அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்ட ஒழுக்கங்களை பாதுகாப்பதற்கு கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் ஒருவரும் கிடையாது என்ற உண்மையையே இந்தச் சாதனைகள் கோடிட்டுக் காட்டுகின்றன.
SHARE

Author: verified_user

0 comments: