Sunday, August 18, 2019

சனத்தொகை வளர்ச்சியும் சவால்களும்.

SHARE
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற பொருளாதாரவாதியான மால்துஸ் பற்றி அறிந்திருக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. ஆம் இவருடைய புகழ்பெற்ற மக்கட்தொகை கோட்பாடு எல்லாப் பாடப் புத்தகங்களிலும் இன்றும் போதிக்கப்பட்டு போற்றிப் புகழப்படுகிறது. 

 அவரது கோட்பாட்டின் சுருக்கம் இதுதான்…

 “தற்பொழுது ஏற்பட்டுவரும் மக்கட் தொகை பெருக்கத்தின் விளைவாக அனைவருக்கும் உணவு கிடைப்பது மட்டுப்பட்டு, மக்கட் தொகை பெருக்கம் கட்டுப்பாட்டுக்குள் வரும்” “உணவு உற்பத்தியின் வளர்ச்சியானது கூட்டல் தொடரிலும் மக்கட்தொகை பெருகுவது பெருக்கல் தொடரிலும் நடைபெறுவதால். ஒரு கட்டத்தில் மக்கட் தொகையானது உணவு கிடைப்பை தாண்டிச் செல்லும்” இதன் விளைவாக உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு பஞ்சம் பசி பட்டினி நோய் ஆகியவற்றால் பெருமளவு மரணம் ஏற்பட்டு மக்கட் தொகையானது கட்டுக்குள் வரும்.

 உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன.

 இவ்வாறான நிலையிலேயே உலக சனத்தொகை தினம் ஒவ்வொரு வருடமும் ஜூலை11  ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை, இளைஞர்களுக்கான முதலீடு என்ற தொனிப்பொருளில் இம்முறை அனுஷ்டிக்கின்றது.

 21 ஆம் நூற்றாண்டில் உலகம் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளுள் முக்கியமான பிரச்சினைகளாக குடித்தொகை அதிகரிப்பு அமைய உள்ளதோடு, அதிகரிக்கும் சனத்தொகைக்கு அவசியமான உணவு, குடிநீர், உறைவிடம். மருத்துவவசதி, மற்றும் வேலை வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுத்தல் என்பனவும் அதனுடன் இணைந்து கொள்ளவுள்ளன. 

 சனத்தொகையின் வளர்ச்சி வேகம்

 இதனை உறுதி செய்வதாகMedindia – calculators World Population Clock  கணிப்புக்கள் அமைகின்றது. அதாவது சனத்தொகையின் வளர்ச்சி வேகமானது வருடத்திற்கு77,760,000  ஆகவும், மாதாந்த வளர்ச்சி வேகம்648,000 ஆகவும், நாளொன்றுக்கு2,116,000 ஆகவும், மணித்தியாலத்திற்கு 9,000 ஆகவும், நிமிடத்திற்கு 150  ஆக காணப்படுகின்ற நிலையில் சனத்தொகையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிதாக சிலர் சேர்த்துக்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

 பாரிய அழிவுகளை சந்திக்கும் 

 இந்நிலை தொடருமாயின் ஒவ்வொரு பதினொரு வருடத்திற்கு ஒரு தடவையும் உலகின் குடித்தொகையில் ஒரு பில்லியன் மக்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என எதிர்வு கூறப்படுகின்றது. இதனால் அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதோடு மட்டுமல்லாது இந்நிகழ்வினால் சுற்றுப்புறச் சூழலும் பாரிய அழிவுகளை சந்திக்கும் என்பது திண்ணமாகும். 

 இவற்றினை கருத்திற் கொண்டு குடித்தொகை தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதோடு மகாநாடுகளும் ஒழுங்கமைப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் உலகின் முதலாவது சர்வதேச குடித்தொகை மாநாடு1974 ஆம் ஆண்டு புச்சாறெஸ்ட்டில் “உலகிக் துரித குடித்தொகை வளர்ச்சி” என்ற கருப்பொருளில் நடைப்பெற்றது. 

 சர்வதேச மாநாடுகள்

 1984 ஆம் ஆண்டில் இரண்டாவது சர்வதேச மாநாடு மெக்சிகோசிலும், மூன்றாவது மாநாடு1994 இல் கெய்ரோவில் குடித்தொகையும் அபிவிருத்தியும் என்ற கருப்பொருளில் நடைபெற்றது. நான்காவது மாநாடு1995 ஆம் ஆண்டில் பிஜிங்கில் நடைபெற்றது. 

 2000 ஆண்டில் மிலேனியம் உச்சி மாநாடு மிலேனியன் அபிவிருத்தி இலக்குகளும் எனும் தொனிப்பொருளில் அமைந்ததை காணலாம். இவ்வாறு சனத்தொகை தொடர்பான மகாநாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதன் மூலம் சனத்தொகை வளர்ச்சி பற்றிய ஆய்வின் முக்கியத்தும் உணர்த்தப்படுவதோடு அப்பிரச்சினைக்கான தீர்வு இன்றும் முன்வைக்கப்படாதும் உள்ளமை கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.

 துண்டுப்பிரசுரம்

 சனத்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். கிரேக்க, உரோம காலத்தில் ஆராயப்படாத இத்துறையானது  17 ஆம் நூற்றாண்டில் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப ஏனைய துறைகளும் வளர்ச்சியடைகின்றன என்பது சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து முக்கியத்துவம் பெறலானது.

 குடித்தொகை கல்வியின் தந்தையாக கருதப்படுகின்ற ஜோன் கிரான்ட  (John Graunt)   தமது அனுபவங்களை கருத்திற் கொண்டு  (Natural and Political Observations made upon the bills of Motality ) என்ற துண்டுப்பிரசுரத்தின் வாயிலாக லண்டன் மாநகரின் இறப்புக்கள் பற்றிய விபரங்களை1622 ஆம் ஆண்டு வெளியிட்டார். 

 கறுப்பு மரணம்

 அன்று முதல் சனத்தொகை பற்றிய கவனம் முதன்மைப் பெறத்தொடங்கியது. 1400  ஆண்டில் நிகழ்ந்த கறுப்பு மரணத்தின் முடிவிலிருந்து உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 20 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த விரைவான மக்கள் தொகை வெடிப்பு காரணமாக புவியில் மக்களின் வாழ்க்கை பாதிப்படைவதைக் குறித்து ஆதங்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன. 

 கி.மு70,000 காலகட்டத்தில் ஏற்பட்ட சனத்தொகையின் அதிகரிப்பினால் பேரழிவுகள் உருவானதாக கூறுகின்ற அறிவியலாளர்கள் இதற்காக டோபா பேரழிவினை உதாரணமாகக் காட்டுகின்றனர். அம்மை இன்ஃப்ளுவன்ஸா போன்ற நோய்களும் ஆரம்பகால சனத்தொகையினை கட்டுப்படுத்தும் காரணிகளாக அமைந்தன.

 உலக மக்கள் தொகை ஒன்று மற்றும் இரண்டு பில்லியன் குறிகளைக் கடந்த சரியான நாள் மற்றும் மாதம் பற்றிய கணக்கீடு எதுவும் இல்லை. மூன்று மற்றும் நான்கு பில்லியனை எட்டிய நாட்கள் அதிகாரபூர்வமாக கொண்டாடப்படவில்லை. 

 ஆனால் அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் செயலகத்தின் பன்னாட்டுத் தரவுதளம் அவற்றை ஜூலை1959 மற்றும் ஏப்பிரல்1974 என்று குறிப்பிடுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பிக் கணிப்பீட்டின் படி சனத்தொகை5 பில்லியனை எட்டிய நாளாக(11 ஜூலை1987) இனையும், மற்றும்6 பில்லியனை எட்டிய நாளாக(12 அக்டோபர்1999) இணையும் வரையறுத்துக் கொண்டாடியது. 

 அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் செயலகத்தின் அகில உலக திட்டப்பிரிவு 1999 ஏப்ரல் 21 அன்று (அதிகாரபூர்வ ஐக்கிய நாடுகள் அமைப்பின் நாடுகள் அமைப்பின் நாளுக்குப் பலமாதங்கள் முன்னதாகவே) உலகம் ஆறு பில்லியனை அடைந்ததாகக் கணக்கிட்டது. அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்புச் செயலகம் ஜூலை2012 ஆம் ஆண்டை7 பில்லியனை எட்டும் நாளாக குறிப்பிட்டது.

 2024 ஆம் வருடத்தில்…

 இருப்பினும் சனத்தொகையின் ஒவ்வொரு மைல் கற்களும் கடக்கப்பட்ட விதம் இவ்வாறு காட்டப்படுகின்றது. 1 பில்லியன் 1804,2 பில்லியன் 1927,3 பில்லியன்1960, 4 பில்லியன்1974,5 பில்லியன்1987,United Nations  கணிப்பீட்டின் படி சனத்தொகையானது 7 பில்லியன்களாக மாறிய வருடமாக ஒக்டோபர்12. 1999 கொண்டாடப்பட்டது. சனத்தொகையானது 7 பில்லியன்களாக மாறிய வருடமாக2011  ஆம் ஆண்டு குறிப்பிட்டுள்ளது. இந்நிகழ்வானது கடந்த வருடம் ஒக்டோபர்31, 2011 நடைப்பெற்றது. United Nations கணிப்பீட்டின் படி சனத்தொகையானது 8 பில்லியன்களாக மாறக்கூடிய வருடமாக2024 ஆம் ஆண்டினை குறிப்பிட்டுள்ளது.

 விழிப்புணர்வை வழங்கும் நாள்

 இவ்வாறான சனத்தொகை வளர்ச்சியினால் ஏற்படுகின்ற மற்றும் ஏற்படவுள்ள பாதிப்புக்களை இனங்கண்ட உலக நிறுவனங்கள் அவற்றினை குறைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் கவனம் செலுத்தி வருகின்றன. இதன் முக்கிய நிகழ்வாக அமைவதே உலக மக்கள் தொகை நாள் ஆகும்.  ஆண்டுதோறும் ஜூலை மாதம்11 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை வழங்குவதாக இந்நாள் அமைந்துள்ளது. 

 உலகின் குடித்தொகையானது கி.பி1600 ஆம் ஆண்டுக்காலப்பகுதிகளில் 400 மில்லியன்களாக இருந்தது. இத்தொகையானது1900 ஆம் ஆண்டளவில்1610 மில்லியன்களாக அதிகரித்ததோடு, 1950 இல் 2.5 பில்லியன்களாக காணப்பட்டதோடு சனத்தொகையானது 2025 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் 8.0 பில்லியன்களாக அதிகரிக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அண்மைக் காலப்பகுதிகளில் ஏற்பட்ட உற்பத்தி மற்றும் சுகாதார விருத்தியின் காரணமாக சனத்தொகை அதிகரித்த போக்கினை காட்டி வருகின்றது. எதிர்வுக்கூறப்படுகின்ற முறையினையே வரைபு காட்டுகிறது.

 ஓராண்டில் உலகின் குடித்தொகையானது 5.5 கோடியாக அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து சனத்தொகை அதிகரிப்பு எனும் பதமானது சனத்தொகை வெடிப்பு என மாற்றமடையத் தொடங்கியது. இவ்வாறாக சனத்தொகையில் ஏற்பட்டு வருகின்ற மாற்றமானது புவியில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதனை அறிவிக்கும் முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் இத்தினம் உலக மக்கள் தொகை தினமாக1987 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு (World Population Day, recognized by the UN )   1989 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டும் வருகின்றது. மக்கள் தொகை பெருக்கத்தின் தீமைகளையும் சிறுகுடும்ப நெறியின் நன்மைகளையும் எடுத்துரைப்பது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

 பிரதேச வாரியாக மக்கள் தொகையின் வளர்ச்சியினை கீழே உள்ள அட்டவணையும், வரைப்படமும் காட்டி நிற்கின்றது. காட்டி நிற்கின்றது. வரலாற்று மற்றும் வரும் காலங்களுக்கான உத்தேச மக்கள் தொகை எண்ணிக்கையை இவை மில்லியன்களில் காட்டுகிறன. வரலாற்றில் மக்கள் தொகை எண்ணிக்கையின் கிடைக்குந்தகைமை பிரதேசங்களுக்கு ஏற்ப மாறுபட்டமைகின்றது. பல்வேறு கண்டங்களில் மக்கள் தொகை பரிணாம வளர்ச்சி நிலைக்குத்து அச்சு மடக்கையாகவே காணப்படுகின்றது. அது மட்டுமல்லாது மக்கள் தொகையின் நிலையும் அவ்வாறானதே. 20 ஆம் நூற்றாண்டில் மருத்துவ முன்னேற்றத்தாலும் மற்றும் பசுமைப்புரட்சியின் காரணமாகவும் விவசாயத்தின் பெருக்கத்தாலும் பல நாடுகளில் இறப்பு விகிதம் குறைந்ததால் மனித வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள் தொகை பெருக்கத்தினை உலகம் பார்த்தது.    

 1989 ஆம் ஆண்டில் ஓராண்டுக்கான88 மில்லியன் மக்கள் தொகை அதிகரிப்பிலிருந்து குறைந்து 2000 ஆம் ஆண்டில் ஏறத்தாழ75 மில்லியன்களாக உலக மக்கள் தொகை அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டிருந்தது. 2000 ஆம் ஆண்டில் பூமியின் சனத்தொகையானது கடந்த300 வருடங்களுக்கு முன்னால் இருந்த மக்களை விட10 மடங்கு அதிகமானவர்கள் உள்ளனர் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 பெண்களின் கருவளம் 

 உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கான பிரதான காரணம் பிறப்பு வீதம். இறப்பு வீதம் என்பனவாகும். பெண்களின் கருவளம் பிறப்பு வீதத்தினை நிர்ணக்கின்றது. இனப்பெருக்க திறன் கொண்ட பெண்கள் பெறும் உயிருள்ள குழந்தைகளின் எண்ணிக்கை கருவளம் எனப்படும். ஓராண்டில் ஆயிரம் மக்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை பிறப்பு வீதம் எனப்படும். பிறப்பு வீதத்தினை நிர்ணயிக்கும் காரணிகளாக வயது,மதம்,கல்வி, பொருளாதாரம் என்பன அமைகின்றன.

 இறப்பு வீதம் 

 குறித்ததொரு ஆண்டில் ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்களில் ஆயிரம் பேருக்கு மரணம் அடைகின்றோரின் எண்ணிக்கை இறப்பு வீதம் எனப்படும்.  நாடுகளின் இறப்பு வீதம் எனும் போது இறந்தோரின் மொத்த எண்ணிக்கையினை ஆயிரத்தினால் பெருக்கி நாட்டின் மொத்த சனத்தொகையால் வகுப்பதன் மூலம் பெறப்படுகின்றது. பொதுவாக இறப்பு வீதத்தினை விட பிறப்பு வீதம் அதிகமாகக் காணப்படுவதே குடித்தொகை பெருக்கத்திற்கு காரணமாகின்றது. நவீன காலத்தில் மருத்துவத்துறையின் முன்னேற்றமே இதற்கு காரணமாக அமைகின்றது.

 எதிர்மறையான வளர்ச்சி

 உலகளவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் சீரான அளவினைக் காட்டினாலும் இலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் துணை சகார ஆபிரிக்கா பகுதிகளில் இதன் வளர்ச்சி உயர் மட்டத்திலேயே காணப்படுகிறது. சில நாடுகளில் எதிர்மறையான வளர்ச்சிகளும் காணப்படுவதை அவதானிக்கலாம். அவ்வாறான நாடுகளில் காலப்போக்கில் குடித்தொகை எதிர்மறையான மக்கள் பெருக்கம் ஆபத்தினை எதிர்நோக்கும் அபாயத்தில் உள்ளன. உதாரணமாக கிழக்கு ஐரோப்பா. யப்பான்,  மேற்கு ஐரோப்பாவின் சில நாடுகள என்பவற்றைக்கூறலாம். 

 2006  ஆண்டில் மக்கள் இனப்புள்ளி நிலைமாற்றங்களின் காரணமாக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை ஐக்கிய நாடுகள் சுட்டிக்காட்டியது. 

 உலகின் சனத்தொகை வளர்ச்சி வீதமானது வருடத்திற்கு1.14 சதவீதம் என கணிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும்80 மில்லின்களாக சனத்தொகையில் அதிகரிப்பு ஏற்படுகிறது. 1960 ஆம் ஆண்டுகளில் சனத்தொகை வளர்ச்சி வீதமானது2 வீதத்தினை தாண்டியதோடு, 1963 ஆம் ஆண்டில் இவ்வளவு2.19 சதவீதமாக அதிகரிப்பினை காட்டியது. எவ்வாறாக இருப்பினும் இவ்வளர்ச்சி சதவீதமானது எதிர்வரும் காலங்களில் ஒரு சரிவினை நோக்கிச்செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது 2020 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் 1 விதமாகவும் 2050 ஆம் ஆண்டுகளில்0.5 வீதமாகவும் குறைவடையலாம் என கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. 

 ஏறக்குறைய 3.8 பில்லியன் மக்களுடன் ஆசியா காணப்படுவதோடு, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து உலக மக்கள் தொகையில் பெரும் பங்கிற்கு வகைகுறித்து நிற்கின்றன. உலக மக்கள் தொகையில்12 சதவீதம் ஆன1 பில்லியன் மக்களுடன் ஆபிரிக்கா தொடர்கிறது. ஐரோப்பாவின்731 மில்லியன் மக்கள் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில்11 சதவீதம் ஆகும். வட அமெரிக்கா514 மில்லியனுக்கும், தென்னமெரிக்கா 371 மில்லியனுக்கும் அவுஸ்திரேலியாக 21 மில்லியனுக்கும் இருப்பிடமாக உள்ளது.

 இலங்கையில் சனத்தொகை

 இலங்கையின் தற்போதைய சனத்தொகை இரண்டு கோடி இரண்டு லட்சத்து71 ஆயிரத்து464 பேர் என்று கடந்த வருடம்(2013.12.31) மேற்கொள்ளப்பட்ட குடிசன மற்றும் குடிமனை மதிப்பீடுகளின் போது தெரியவந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

 இந்த எண்ணிக்கையில் 77.3 சத வீதம் கிராமப்புறங்களிலும் 18.3 வீதம் நகரப்புறங்களையும் உள்ளடக்கியுள்ளது.அத்துடன்4.4 சதவீத மக்கள் பொருந்தோட்டங்களில் வசிக்கின்றனர். இறுதியாக1981 ஆம் ஆண்டு சனத்தொகை மதிப்பிடு மேற்கொள்ளப்பட்டதிலிருந்து இன்று வரை36% சனத்தொகை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. அதிகரித்தத் தொகையானது54 இலட்சத்து24 ஆயிரத்து714 ஆகும். மக்கள் செறிவுக்கு இணங்க ஒரு வர்க்க கிலோமீற்றரில் வாழும் சனத்தொகையின் எண்ணிக்கை323 என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

 இதன்படி கொழும்பிலேயே அதிகளவாக ஒரு வர்க்க கிலோமீற்றரில் 3417 பேர் வசிக்கின்றனர். மிகக் குறைந்த சனத்தொகை செறிவு முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவுகின்றது. அங்கு ஒரு வர்க்க கிலோமீற்றரில் 38 பேர் மாத்திரமே வாழ்கின்றனர். ஆண் மற்றும் பெண் என்ற அடிப்படையில் சனத்தொகை மதிப்பிடலின் போது100 பெண்களுக்க94 ஆண்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர வயது அடிப்படையில் கணக்கிடும் போது18 வயதுக்கு குறைந்த சிறார்களை கவனத்தில் கொள்ளும் போது102 பெண்களுக்கு100 ஆண் பிள்ளைகள் என்று தெரியவந்துள்ளது.

 உலகின் சனத்தொகை7 பில்லியனை எட்டிவிடும் என்பதால் இயற்கை வளங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அமெரிக்க அரசாங்கம் எதிர்வு கூறியுள்ளது. அமெரிக்காவானது உலகில் மூன்றாவது சனத்தொகை அதிகமான நாடாக காணப்படுவதோடு ஏனைய இடங்களை இந்தியாவும்,சீனாவும் பெற்றிருப்பதைக் காணலாம். 

 இந்தியாவுக்கு அபாயம்

 இலங்கை 53 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் சனத்தொகை அதிகரிப்புக்கு முன்னேற்றம் கண்டிருக்கும் மருத்துவ மற்றும் போசாக்கு போன்றவற்றில் இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஏற்பட்ட அபிவிருத்தி காரணமாக அமைந்தன என அமெரிக்க அறிவியலாளரான ஹஊப் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது கலாசார மாற்றங்களையும், பெண்கள் வேலைக்குச் செல்வதையும், பாடசாலைக்குச் செல்வதையும் காரணம் காட்டினார். இதனடிப்படையில் எதிர்காலத்தில் அதிக சனத்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

 பூமியில் எத்தனை பேர் வாழ முடியும் என்பது பற்றிய கணிப்பீடுகள் இதுவரை கணிக்கப்படவில்லை என வொஷிங்டனில் செயற்படும் பூருக்கிங்ஸ் நிறுவனத்தின் நிபுணர் வில்லியம் ப்ஃரே தெரிவித்துள்ளார். பூமியில் காணப்படும் வளங்களை மக்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதனை பொறுத்தே வாழக்கூடிய மக்கள் தொகை தீர்மானிக்கப்படும் என்பதாக அவர் தெரிவித்தருந்தார். ஆபிரிக்க,ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பாலான பெண்கள் சராசரியாக6 ற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனா எனவும் அவரது ஆய்வுகள் சுட்டி நிற்கின்றன. 

 முதியோர் தொகை அதிகரிப்பு

 சனத்தொகை அதிகரிப்பானது இலங்கையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தெரிவித்துள்ளது. சனத்தொகை அதிகரிப்பதனால் வேலையின்மை, சுகாதாரப்பிரச்சினைகள் எதிர்கொள்ள நேரிடுமென ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் சனத்தொகையில் முதியோர் தொகை அதிகரிப்பும் முக்கிய பிரச்சினையாக அமைய உள்ளது. இலங்கையில் சனத்தொகையில்10 வீதத்தினர்60 வயதிலும் கூடியவர்களாக உள்ளனர். 2020 ஆம் ஆண்டில் இத்தொகை20 வீதமாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதே வேளை ஆண்களை விட பெண்களின் தொகை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
 குடும்பக் கட்டுப்பாடு

 கட்டிளமைப் பருவத்தினரும் இளைஞர்களும் மக்கள் தொகையில்26 சதவீதமாக உள்ளனர். இலங்கையில்15-24 வயதிற்கிடையில் உள்ளோர்5.6 மில்லியன்களாகும் என கூறும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் கூறியுள்ளது. எனவே இவர்களுக்கு அறிவை ஊட்டி குடும்பக் கட்டுப்பாடு பற்றிய தெளிவை ஏற்படுத்தல் அவசியமாகின்றது. ஐக்கிய நாடுகள் சார்ந்த அமைப்புக்கள் சனத்தொகை அதிகரிப்பைத் தடுப்பதற்காக பல விழிப்புணர்வுகள் கருத்தரங்குகள் திட்டமிட்ட குடும்ப அமைப்புகள், கருத்தடைச்சாதன உபயோகிப்பின் அவசியம், குழந்தைகள் சுகாதாரம் போன்ற விடயங்களில் கவனத்தினை செலுத்தினாலும் சனத்தொகை அதிகரிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

 உலக சனத்தொகையில் அரைவாசி மக்கள் இன்று25 வயதில் இருப்பதனால் குறுகிய காலத்தில் சனத்தொகையை கட்டுப்படுத்தவது சாத்தியமற்றதாகும். உலகில்925 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். வருடத்திற்கு25 மில்லியன் குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர். போசாக்கின்மையினால் 170 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக காணப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் சனத்தொகை அதிகரிக்கின்ற போது பட்டினி இறப்புக்களும் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பிறப்பும் காணப்படும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே திட்டமிட்ட முறையில் குழந்தைகளைப் பெற்று அவர்களை ஆரோக்கியத்துடன் வளர்த்தெடுக்க இத்தினத்தில் திடசங்கட்பம் கொள்வது அவசியமாகும்.

 ஆண்களின் வயதெல்லையும் பெண்களின் வயதெல்லையும்

 இலங்கையின் இயற்கை அதிகரிப்பு வீதம்1.1 ஆகவும் பிறப்பு வீம்1000 பேருக்கு17.9வீதமாகவும். இறப்பு விதம்1000 பேருக்கு6.6 விதமாகவும் காணப்படுகிறது. இலங்கையின்2001 ஆம் ஆண்டு மதிப்பிட்டின் படி18,797,257 ஆகவும்,2007 ஆம் ஆண்டில்20,010,000 ஆகவும் காணப்பட்ட தொகையானது2009 ஆம் ஆண்டில்   21,128,772 ஆகவும் இன்று 2.271.464 என அதிகரித்துமுள்ளது. ஆண்களின் சராசரி வயதெல்லை71 ஆக காணப்பட பெண்களின் வயதெல்லை78 என கூறப்பட்டுள்ளது. 

 இலங்கையின் சராசரி வளர்ச்சி வீதம்(1995. 2000) 1.1 இலிருந்து (2045) 0.45 குறையுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. கருவள வீதத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன். இதற்கு காரணம் பெண்கள் கல்வியில் ஈடுபடுதல், பெண்கள் தொழில்வாய்ப்புப் பெருதல், திருமண வயதில் ஏற்பட்ட மாற்றம், குடும்பக்கட்டுப்பாடு விழிப்புணர்வு என்பனவாகும்.

 பூமிக்கு நாமே பாரமாகிவிட்டோம்

 பூமியில் உள்ள வளங்கள்200 கோடி மக்களுக்கு மட்டுமே போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகப்படியான மக்கள் தொகையால் சமூக, பொருளாதார, சுற்றுப்புறச்சூழல் பிர்சசினைகள் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு நாளும் பூமியின் வளங்களை புதிதாக2 இலட்சம் பேரோடு பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. நாம் வாழும் பூமிக்கு நாமே பாரமாகிவிட்டோம் என்ற உணர்வு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

  சனத்தொகையானது பூமியிலுள்ள பயன்பாட்டிற்குரிய வளத்தை விட அதிகரிப்பதனால் குடிநீர் மற்றும் உணவு வளப்பிரச்சினைகள் விரைந்து அதிகரிக்கின்ற நிலை தோன்றியுள்ளது. இதனை ஈடுசெய்யவதற்கு நீர் முகாமைத்துவம் மற்றும் மரபணு மாற்றங்கள் பயன்படுத்தப்படவேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. 

 சனத்தொகை அதிகரிப்பானது பூமியின் கொள்ளளவை விட விஞ்சிவிட்டதனால் அதனை கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் காணப்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். மக்கள் தொகை பெருக்கமானது அபிவிருத்தியடைந்த நாடுகளை விட அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலேயே தாக்கத்தினை ஏற்படுத்தும் என கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அதாவது உலக சனத்தொகையில்80 விதத்தினை கொண்டுள்ள இவர்கள்20 விதமான வளத்திற்கே உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர். இதற்கு மாறான நிலையே அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படுகின்றது.

 பட்டினிச்சாவு ஏற்படும்

 ஜூன் 2009 ஆம் ஆண்டு கூட்டப்பட்ட ஜி8 மாநாட்டில் உரையாற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஜொசெரின் கூற்றிற்கு ஏற்ப உலகில்  6 பேரில் ஒருவர் பசியின் கொடுமைக்கு உள்ளாகின்றனர். பலர் போசாக்கின்னையினால் பாதிக்கப்படுகின்றனர் ஆபரிக்க நாடுகளில் இந்நிலை அதிகமானதாகும்.  இந்நிலை இதற்கு முன்னர் காணப்படவில்லை என கூறும் இவர், இந்த நிலை நீடித்தால் பட்டினிச்சாவு ஏற்படுவதோடு மனிதாபிமானத்தின் அவலத்திற்கு பூமி வற்துவிடும் என்கிறார். பெண்ணொருவருக்கு 2.5 பிள்ளைகள் என காணப்படும் நிலை தொடருமாயின்2050 ஆம் ஆண்டில்21 வீதத்தில் பிறப்பு வீதம் விழ்ச்சியடையும் எனவும் கூறுகின்னறார்.

 வறுமை. வேலையின்மை அடிப்படை சுகாதார வசதியில்லை. சுற்றுப்புறச்சூழல் கேடு, தண்ணீர்ப் பஞ்சம். போன்றவற்றிலிருந்து வன்முறை,கொலை,கொள்ளை வலையிலான அனைத்தும் பெருக்கமடையும் அபாயம் இருப்பதாக கூறபபடுகின்றது.மக்கள் தொகை பெருக்கத்தினால் வனவளம் அருகி மண் அரிப்பு பெருகி சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படும். கட்டிடவாக்கத்தன் விருத்தியினால் பயிர்செய்கைக்கான நிலம் குறைவடைந்து வருகிறது கிராம மக்கள் நகரங்களைநோக்கி இடம்பெயர்கின்றனர். எனவே, அங்குள்ள சூழல் பாதிக்கப்படுகின்றது அவ்விடத்தில் சுற்றுப்புறச்சூழல் சீர்கெடுகிறது. குடிநீர்ப்பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், மருத்துவனைகளில் கூட்டம், பள்ளிக்கூடங்களில் இடமின்மை, போன்ற பல்வேறு பிரச்சினைகளால் நகரங்கள் நரகங்களாகும் அபாயத்தினை உலகம் எதிர்நோக்கியுள்ளது.

 சோறிட வேண்டும்

 மக்கள் தொகைப் பெருக்கம் குறித்த இரு வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அதாவது பிறக்கும் குழந்தைகள் வயிரோடு மட்டும் பிறக்கவில்லை உழைப்பதற்கு இரு கரங்களோடு பிறக்கிறது. இது சமவுடமைவாதிகளின் கருத்தாகும். சமவுடமை வாதிகள் சனத்தொகையினை வளமாகக் கருதுகின்றனர். ஒரு சோடிக்கரங்கள் பல சோடி வயிற்றுக்கு காலமெல்லாம் சோறிட வேண்டும் என்பதனால் ஒவ்வொரு குழந்தைகளையும் முதலாளிததுவம் சுமையாகக் கருதுகின்றது.

 அறியப்பட்ட வளங்களை கணக்கில் கொண்டு உலக மக்கள் தொகை மிகையாக கருதப்படுகிறது. நானைய தினம் மனிதனின் அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சியால் இயற்கையின் இரகசியங்கள் முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டு புதுப:புது வளங்கள் கண்டறியப்படுமானால் இருக்கும் இந்த மக்கள் தொகை குறைவானதாக கருதப்படும் நிலை தோன்றலாம். 

 பேராபத்தினை ஏற்படுத்தக்கூடும்

 மக்கள் தொகை அதிகரிப்பானது கேடானதாக மாறும் நிலை காணப்படுவதோடு குறைவும் பேராபத்தினை ஏற்படுத்தக்கூடும். அதாவது எதிர்க்காலத்தில் உழைக்கும் வர்க்கத்தினரின் எண்ணிக்கையினை குறைத்துவிட்டு தங்கிவாழ்வோரின் அளவினை அதிகரிக்குமாயின் உற்பத்தி முடக்கத்திற்கும் வழிவகுக்கலாம். எவ்வாறாக இருப்பினும் எதிர்காலத்தின் ஆபத்தினை குறைப்பதற்கான நடவடிக்கைகள் அரசும் தனியாரும் எடுக்கவேண்டிய கட்டாயத்தினை சனத்தொகை அதிகரிப்பானது ஏற்படுத்தியிருப்பதை உலக மக்கள் தொகை தினங்கள் உணர்த்தி நிற்பதைக் காணலாம்.
SHARE

Author: verified_user

0 comments: