Sunday, September 15, 2019

உலக நாடுகள் சங்கம்

SHARE

உலக நாடுகள் சங்கம் (League of Nations, LON) என்ற பன்னாட்டு கழகம் பாரிசு அமைதி மாநாட்டின்படி முதல் உலகப் போர் முடிந்த பின்னர் எதிர்காலத்தில் இத்தகைய போர்கள் நடைபெறா வண்ணம் காக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முன்னோடியான இதுவே தனது முதற் குறிக்கோளாக அமைதிப் பேணலைக் கொண்ட முதல் நிரந்தர பன்னாட்டு உலகப் பாதுகாப்பு அமைப்பாகும். உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உருவாக்க ஒரு சட்டப்பிரிவும் வெர்சேல்ஸ் உடன்படிக்கையில் இடம்பெற்றிருந்தது. பன்னாட்டுக்கழகம் நிறுவப்படுவதற்கு காரணமாக இருந்தவர் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன். பாரிஸ் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது பன்னாட்டுகழகம் அமைப்பதற்காக பெருமுயற்சி எடுத்தார். 1920 ஆம் ஆண்டு பன்னாட்டுகழகம் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஜெனீவாவில் இருந்தது. தனது உச்சநிலையில், 28 செப்டம்பர் 1934 முதல் 23 பெப்ரவரி 1935 வரை, 58 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அதனுடைய வரைமொழியின்படி, கூட்டுப் பாதுகாப்பு மூலமாக போர்த்தடுப்பு, ஆயுதங்கள் குறைப்பு, பன்னாட்டு முறையீடுகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணுதல் மற்றும் பன்னாட்டு மத்தியஸ்தம் ஆகியவற்றை முதன்மையான நோக்கங்களாகக் கொண்டிருந்தது. மேலும் தொழிலாளர் நலன், பழங்குடியினர் உரிமை பாதுகாப்பு, மனித அடிமைகள் போக்குவரத்து, போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல், உலக நலன் மற்றும் சுகாதாரம், போர்க்கைதிகள் போன்ற பல பிரச்சினைகளும் இவ்வமைப்பால் கவனிக்கப்பட்டது.
SHARE

Author: verified_user

0 comments: