Wednesday, August 14, 2019

தமிழ்த் தரப்பின் ஆதரவு யாருக்கு?

SHARE
இன்னும் கலையாத மௌனம்; சம்பந்தனின் புதுடில்லி பயணத்தின் நோக்கமென்ன?

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் களைகட்டியுள்ள இன்றைய நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோட்டாாய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அமெரிக்கா ஆதரவு தருவதாக சமீப காலமாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக செய்திகள் அடிபடுகின்றன. அதேநேரத்தில் அண்மையில் இந்தியாவுக்குச் சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மறுத்து விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கோட்டாபய ராஜபக்‌ஷ தரப்பினால் கேட்கப்பட்ட போதிலும், அவ்வாறான சந்திப்புக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதுஒருபுறமிருக்க, "கோட்டாபய ராஜ்பக்ஷ நாட்டின் ஜனாதிபதியானால் நாடு அபிவிருத்தி அடையாது; நாசமாகி விடும்" என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

"ராஜபக்சே குடும்பத்தினர் கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளனர். அவர்களை நான் ஒருபோதும் ஆதரிக்கப் போவதும் இல்லை" என்றும் சந்திரிகா கூறியுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோட்டாபயவை எதிர்த்து பிரமமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதியான காலஞ்சென்ற ஆர். பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச களமிறங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பபொன்று நிலவுகின்றது.

"எதிர்வரும் நவம்பரில் நானே தேசத்தின் ஜனாதிபதியாவேன்" என சஜித் பிரேமதாச கூறியிருக்கிறார்.

சிங்களக் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் படுதீவிரமாக இருக்கும் நிலையில், தமிழ் அரசியல் கட்சிகள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. 'அனைத்து அரசியல் கட்சிகளும் அதிகாரபூர்வமாக வேட்பாளர்களை அறிவித்த பின்னர் எங்களின் நிலைப்பாட்டை அறிவிப்போம்' என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

பொதுவாக இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இந்தியாவுடன் ஆலோசனை நடத்திய பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுப்பது வழக்கம் ஆகும். அதனால் இம்முறையும் இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் டெல்லிக்குச் சென்றுள்ளாரென்று தகவல்கள் வருகின்றன. ஆனால் மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இரா. சம்பந்தன் டெல்லிக்குச் சென்றுள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.
SHARE

Author: verified_user

0 comments: