Wednesday, August 14, 2019

பௌத்த பாரம்பரியத்தின் தொன்மைமிகு அடையாளம்

SHARE
பெரஹரா உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் வருடந்தோறும் இடம்பெற்று வருகின்ற கண்டி எசல பெரஹரா உற்சவம் தற்போது மிகவும் கோலாகலமாக கண்டியில் நடைபெற்று வருகின்றது.

பௌத்த சமயத்தவர்களால் மிக உயர்வாக மதிக்கப்படுகின்ற மதத் தலமான ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த சிறப்பு மிக்க விழா எசல பெரஹரா ஆகும். ஸ்ரீ தலதா மாளிகை என்பது இலங்கையின் மத்திய பிரதேசத்தின் கண்டி நகரில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற பௌத்த ஆலயமாகும். பௌத்த சமய மக்களால் புனிதமாகவும் உயர்வாகவும் மதிக்கப்படுகின்ற புத்தர் பெருமானின் புனித தந்தம் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக கண்டி தலதா மாளிகை 'புனித தந்த தாது ஆலயம்' எனவும் அழைக்கப்படுகின்றது.

இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் வாழும் பௌத்த மக்களின் பெருமதிப்புக்குரிய புனித தலமாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகை போற்றப்படுகின்றது.

1592 தொடக்கம் 1815 வரை மலையக இராசதானியான கண்டி இராச்சியத்தின் தலைநகரமாக கண்டி நகரம் விளங்கியது. அதனை ஆட்சி செய்து வந்த அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயமும் அமைந்துள்ளபடியால் வரலாற்று சிறப்பு மிக்கதாக ஸ்ரீ தலதா மாளிகை விளங்குகின்றது. இதன் சிறப்பு பௌத்த மக்கள் வாழும் இடமெல்லாம் வியாபித்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் வருடம் தோறும் பல வைபவங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் குறிப்பாக நான்கு பெருவிழாக்கள் இடம்பெறுகின்றமை ஒரு சிறப்பம்சமாகும். சித்திரை மாதத்தில் நிகழும் விழா சித்திரைப் புத்தாண்டு வைபவம் எனவும், தொன்மைமிக்க கலாசார பாரம்பரியங்களுடனான ஆடி– மாதத்தில் நிகழும் விழா எசல பெரஹரா எனவும்,கார்த்திகை மாதத்தில் நிகழும் நிகழ்வு கார்த்திகை தீப வைபவம் எனவும்,தை மாதத்தில் நிகழும் நிகழ்வுக்கு புத்தரிசி பொங்கும் வைபவம் எனவும் அழைக்கப்படும்.இவ்வாறு நான்கு முக்கிய நிகழ்வுகள் வருடம் தோறும் ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெறுகின்றன. இந்தவகையில் ஆடி மாதத்தில் நிகழும் ஒரு வருடாந்த உற்சவமே எசல பெரஹரா ஆகும்.

அதாவது நகரை பேரணியாகச் சுற்றும் ஆடி மகோற்சவம் எனக் கூறப்பட்டாலும் கூட, இது எசல பெரஹெர என்பதன் பேரில் பௌத்த மக்களின் கலாசார பண்பாடுகளை சித்தரிக்கின்ற ஒரு திருவிழாவாகவே மிக பண்​ைடய காலம் முதல் தொடர்ந்து வருகின்றது.

இந்த வருடத்திற்கான எசல பெரஹெராவை கண்டியின் நான்கு தேவாலயங்களுடன் தலதாமாளிகையும் இணைந்து வழமை போல நடத்துகின்றன.சிவன் கோவிலில் காப்புக்கட்டுதலுடன் (கப்) கடந்த 2ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 5.10 இற்கு சுபவேளையில் சமய சம்பிரதாய நிகழ்வுடன் பெரஹரா ஆரம்பமாகியது.

கடந்த 05ம் திகதி முதல் 09ம் திகதிவரை வெளி பெரஹர என்ற வெளிவீதி ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. முதலாவதாக கும்பல் பெரஹரா என்ற பெயரிலான ஊர்வலம் இடம்பெற்றது. நாளை 09 ம் திகதியுடன் கும்பல் பெரஹரா முடிவடைந்த நிலையில் எதிர்வருகின்ற 10ம் திகதி மாலை 6.23 மணியளவில் ரந்தோலி ஊர்வலம் ஆரம்பமாகும் . இந்த ரந்தோலி ஊர்வலம் தொடராக கண்டி நகரின் பல வீதிகளில் இரவு நேர ஊர்வலமாக வலம் வரும். ரந்தோலி ஊர்வலம் முடிவடைந்ததுடன் எதிர்வரும் 15ம் திகதி பகல் 11.52 ற்கு பகல் பெரஹரவுடன் ‘தியா கெப்பீம’ என்ற நிகழ்வுடன் பெரஹர நிகழ்வுகள் முடிவடையும்.

கண்டி எசல பெரஹர உற்சவம் சிறந்த முறையில் நிறைவடைந்ததை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும்.அன்றைய தினம் வழக்கம் போல மாலை 5.00 மணியளவில் பெரஹர உற்சவத்தில் கலந்து கொண்ட யானைகளுக்கு ஜனாதிபதியினால் பழங்கள் ஊட்டப்படும். அதனைத் தொடர்ந்து பெரஹரா நிகழ்வுகளில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கி வைக்கப்படும்.

அந்நிகழ்வின் போது உற்சவ நிகழ்வுகள் மிகச் சிறந்த முறையில் நிறைவடைந்ததமை பற்றிய தகவல் அடங்கிய பேழையை ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே ஜனாதிபதிக்கு வழங்கி வைப்பார்.

இந்த எசல பெரஹர உற்சவத்தை கண்டு களிக்க நாடு முழுவதிலிருந்தும் நாள் தோறும் பெருமளவு பக்தர்கள் கண்டி நகருக்குள் குவிந்த வண்ணம் உள்ளனர். இம்முறை அதிகமான வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் காணக் கூடியதாக இல்லை.

பக்தர்களுக்காக உச்சக்கட்ட பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தற்போது நடைபெற்று வருகின்ற ஊர்வலத்தின் போது கண்கவரும் ஆடைகளுடன் அலங்கரிக்கப்பட்ட யானைகள் வலம் வருகின்றன. தீ நடனம், சவுக்கடி நடனம், கண்டி நகர பாரம்பரிய நடனம் போன்ற பல்வேறு பாரம்பரியக் கலைகளை காண முடிகின்றது.

இந்த ஊர்வலத்தின் போது புனித சின்னங்கள் அடங்கிய பேழை, தேவலாயங்களின் திருஆபரணங்கள் நகர் வீதியாக எடுத்துச் செல்லப்படுகின்றன. தவில், நாதசுரம், கரகம், காவடி, முதலான தமிழர்களின் பாரம்பரியக் கலைகளையும் அங்கே காண முடிகின்றது.

கண்டி பெரஹரவில் சிங்கள மக்களின் கலைகலாசாரத்தை பறைசாற்றும் வகையில் கண்டிய நடனம் ஆடப்படுகின்றமை முக்கிய அம்சமாகும்.பதினாறிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த கண்டி அரசர்களால் இந்நடனத்தின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
SHARE

Author: verified_user

0 comments: